ECONOMYNATIONAL

பொதுத் தேர்தலை முன்னிட்டு விமான டிக்கெட் கட்டணத்தைக் கட்டுப்படுத்த மேவ்கோம் நடவடிக்கை

கோலாலம்பூர், அக் 21- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுப்பதற்காக டிக்கெட் விலையை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் (மேவ்கோம்) மேற்கொள்ளவிருக்கிறது.

நடப்புச் சூழலுக்கேற்ப விலையை நிர்ணயிக்கும் செயல்முறையின் கீழ் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்துவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகப்படியாக உயரும் சமயங்களில் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி கட்டணங்களை உயர்த்தும் விமான நிறுவனங்கள் மீது மேவ்கோம் நடவடிக்கை எடுக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.

டைனமிக் பிரைசிங் மெக்கனிசம் எனும் அந்த முறையின் கீழ் உலகிலுள்ள எல்லா விமான நிறுவனங்களும் முன்கூட்டியே வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு குறைந்த கட்டணமும் பயண தேதி நெருங்கும் சமயத்தில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணமும் விதிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள தரைப் போக்குவரத்து நிறுவனத்தின் மத்திய பிராந்திய அலுவலகத்தில் நேற்று “டாக்சி போர் யூ“ செயலியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் விமான டிக்கெட்டுகளின் விலை இரு மடங்காக அதிகரித்து விட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :