ECONOMYSELANGOR

ஆண்டு இறுதிக்குள் 20 லட்சம் பேரை இலவச காப்புறுதி திட்டத்தில் பதிய மாநில அரசு இலக்கு

ரவாங், அக் 21– இவ்வாண்டு இறுதிக்குள் 20 லட்சம் சிலாங்கூர் மக்கள் மாநில அரசின் இலவச காப்புறுதி பாதுகாப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

இம்மாதம் முதல் தேதி இந்த காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்த காப்புறுதி  திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை எட்டியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதுவரை நாற்பதாயிரம் பேர் பதிவு செய்துள்ளது நல்ல தொடக்கமாக உள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் பேர் வரை பதிவு செய்வார்கள் என தொடக்கத்தில் நாங்கள் கணித்திருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 2,000 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

கிள்ளானில் நாளை நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் போது இந்த காப்புறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயது வரையிலானவர்கள் வரை இந்த காப்புறுதி திட்டத்தில் பங்கு பெறலாம் எனக் கூறிய அவர், தேவையின் அடிப்படையில் அவ்வப்போது இந்த திட்டம் தரம் உயர்த்தப்படும் என்றார்.

வரும் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த இன்சான் காப்புறுதித் திட்டம் தொடர்பில் சிறப்பான செய்தியை வெளியிடவிருக்கிறோம். மக்களிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் தரம் உயர்த்தப்படும் என்றார் அவர்.

மாநிலத்திலுள்ள 60 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் இலவச காப்புறுதி திட்டம் அமல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த காப்புறுதித் திட்டத்தின் வழி விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அல்லது நிரந்தர முடத்தன்மைக்கு 10,000 வெள்ளி வரை இழப்பீடு பெற முடியும்


Pengarang :