ECONOMYSELANGOR

அடுக்குமாடி குடியிருப்பு பிரச்னைகளுக்கு கட்டிட ஆணையம் உடனடி தீர்வு காண வேண்டும்

கோலாலம்பூர், அக் 21- சிலாங்கூரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு கட்டிட ஆணையம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூரைகள் ஒழுகுவது தொடர்பில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களிடமிருந்து ஊராட்சி மன்றங்களும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் புகார்களைப் பெற்று வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் மேல் மற்றும் கீழ்த்தளங்களில்  இத்தகைய பிரச்னைகள் நிலவுகின்றன. இதுதவிர, இத்தகைய குடியிருப்புகளில் கூட்டு நிர்வாக மன்றத்தின் அனுமதியின்றி விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பான புகார்களையும் நாங்கள் பெற்று வருகிறோம் என அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணைக்கு அழைப்பதன் மூலம் இவ்விவகாரத்தில் உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் கட்டிட ஆணையம் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று இங்குள்ள பார்க் ரோயல் கலெக்ஷனில் முதல் நிலை அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீதான ஆய்வரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குறிப்பாக மலிவு விலை குடியிருப்புகள் சம்பந்தப்பட்ட பராமரிப்பு செலவு விவகாரத்தில் கூட்டு நிர்வாக மன்றங்களுக்கு மாநில அரசு உதவி வருவதாகவும் இங் கூறினார்.


Pengarang :