ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கடுமையாக உழைத்தால் பேராக்கில் அதிக தொகுதிகளை ஹராப்பான் வெல்லும்- அன்வார்

கிள்ளான், அக் 21- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த எதிர்பார்ப்பை நனவாக்க கட்சி உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பேராக்கை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். இருப்பினும், இன்று பினாங்கு, நாளை சபா வரும் திங்கள்கிழமை சரவா என பிற மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று இங்குள்ள லிட்டில் இந்தியா வணிக வளாகத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டை வழிநடத்தக் கூடிய மூன்று தலைவர்களின் பெயரை முன்வைத்த முன்னாள் துணைப் பிரதமர்  துன் மூசா ஹீத்தாமிற்கு  தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

எனக்கு உதவக்கூடிய அந்த அறிக்கைக்காக  துன் மூசா ஹீத்தாமிற்கு நன்றி கூறுகிறேன். நான் தகுதியானவன் என்றும் அனைத்துலக அளவில் செல்வாக்கு உள்ளவன் என்றும் அவர் கூறியுள்ளார் என்று அன்வார் குறிப்பிட்டார்.

வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை பக்கத்தான் ஹராப்பான் கைப்பற்றினால் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தாமே என்று அன்வார் நேற்று முன்தினம் அறிவித்தார்.

பேராக் மாநிலத்தின் மாண்பை உயர்த்துவதற்கும் புதிய பொருளாதார சக்தியாக நாடு உருவாக்கம் காண்பதற்கும் உதவும் நோக்கில் இத்தேர்தலில் தாம் தம்புன் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :