ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாணவர் பகடிவதை- முதலாம் படிவ மாணவர்கள் மூவரிடம் வாக்குமூலம் பதிவு

ஷா ஆலம், அக் 22- பந்திங்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் மாணவர் ஒருவர் பகடிவதைக்கு ஆளானது தொடர்பில் முதலாம் படிவ மாணவர்கள் மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பதிமூன்று வயதுடைய தன் மகன் பகடிவதைக்கு ஆளானது தொடர்பில் 40 வயதான குடும்ப மாது ஒருவரிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமது நோர் கூறினார்.

சக மாணவர்களால் தாக்கப்பட்டதன் காரணமாக அம்மாணவனுக்கு கன்னத்தில் வலி ஏற்பட்டதாக அவர் இன்று இங்கு வெளியிட்ட  அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இம்மாதம் 12ஆம் தேதி பள்ளிக்கு மட்டம் போட்டது தொடர்பில் கட்டொழுங்கு ஆசிரியரை சம்பந்தப்பட்ட அம்மாணவர் சந்திக்க வராத காரணத்தால் சக மாணவர்கள் அவரை தாக்கியதாக நம்பப் படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 147வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதைத் தவிர்க்க இச்சம்பவம் தொடர்பில் தவறான தகவல்கள் மற்றும் ஆருடங்கள் வெளியிடுவதை தவிர்க்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

சக மாணவர்களால் அறைந்தும் உதைத்தும் துன்புறுத்தப்பட்ட மாணவர் அழுவதை சித்தரிக்கும் 55 விநாடி காணொளி நேற்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.


Pengarang :