ECONOMYSELANGOR

கொள்ளையர்கள் – துரோகிகளிடமிருந்து  நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்போம் சிலாங்கூர் மந்திரி புசார் சூளுரை.

கோல சிலாங்கூர் அக்.26- கோல சிலாங்கூரில் நம்பிக்கை கூட்டணியின் ” இலட்சியங்களின் நம்பிக்கை பயணம்” மூன்றாவதாக வெகு விமரிசை உடன் நடை பெற்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ” கொள்ளையர்கள் மற்றும் துரோகிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம் என்று சூளுரைத்தார். சிலாங்கூர் மற்றும் நாட்டு மக்கள் அனைவரின் பேராதரவுடன் எதிர் வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்போம் என்று பலத்த கைதட்டலுக்கு இடையே சூளுரைத்தார்.

இலட்சியங்களுடன் நம்பிக்கை பயணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜொகூரில் மக்களின் ஆதரவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மலாக்காவில் இப்பயணம் தொடர்ந்தது. நேற்று மூன்றாவதாக கோல சிலாங்கூரில் கோலகலமாக இந்நிகழ்வு நடைபெற்றது. நம்பிக்கை கூட்டணியின் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய நிலையிலான தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த இலட்சியப் பயணம் இணைய தளங்களில்  இன்று வரையில் 5 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கையை பார்த்து பலர் மிரண்டு போய் உள்ளனர்.

சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் முன் உதாரணமாக திகழ்கிறது. 2008 ஆம் ஆண்டில் தேசிய முன்னணி இடமிருந்து எடுக்கையில் 400 மில்லியன் மட்டும் கையிருப்பாக இருந்தது. ஆனால் இன்று 3 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் சிலாங்கூர் மாநிலம் கையிருப்போடு வெற்றி நடை போடுகிறது.

இதே காலகட்டத்தில் 46 க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. புதிதாக மாநில அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள இன்சான் காப்புறுதி திட்டமும் நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காப்புறுதி திட்டம்

நமது இந்த காப்புறுதி திட்டம் எப்படி கொண்டு வர முடிந்தது என்பதை மத்திய நிதி அமைச்சின் முக்கிய பொறுப்பாளர்கள், வினா  எழுப்பி வருகின்றனர்.

இத்திட்டத்தின் வழி சிலாங்கூரில் பிறந்த அனைவருக்கும் நல்ல பயனை கொண்டு வரும். தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் 46 திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதே காலக் கட்டத்தில் 500 மில்லியன் ரிங்கிட் செலவில் எல்லா மேம்பாட்டு திட்டங்களும் தொடர்ந்து செயல்படுகின்றன.

சீன,  தமிழ் மொழி பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும்  நிதியுதவி

சமய பள்ளிகள், சீன மொழி பள்ளிகள், தமிழ் மொழி பள்ளிகளுக்கும் ஆண்டு தோறும் தொடர்ந்து நிதியுதவி அளிக்கப் படுகின்றன.

மேலும் தேசிய பள்ளிகள் மேம்பாட்டுக்கு நிதியுதவி வழங்கி வருகிறோம். சிலாங்கூர் மாநில ஆட்சி நம்பிக்கை கூட்டணியின் முன் உதாரணமாக திகழ்கிறது.

நம்மால் சிறப்பாக ஆட்சி செய்ய முடியாது என்று விஷம பிரச்சாரம் செய்தவர்கள், தற்போது நம்மை கண்டு பேச முடியாமல் வாய் மூடி மௌனித்து வருகின்றனர்.

கடந்த 14 ஆண்டுகளாக சிலாங்கூரில் நிலையான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து 24.8% வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசின் வருவாயில் சிலாங்கூர் மாநிலத்தின் பங்களிப்பு  முதலிடம் வகிக்கிறது.

இப்படி சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 22 நாடாளுமன்ற தொகுதிகளையும் நம்பிக்கை கூட்டணியின் கைவசம் கொண்டு வர அனைவரும் கடுமையாக பாடு பட வேண்டுகிறேன். இதனை செய்ய முடியுமா என்று மந்திரி புசார் வந்திருந்த ஆதரவாளர்களை நோக்கி கேட்டார், உடனே அனைவரும் முடியும் என்று மிகுந்த உற்சாகத்துடன் பதில் அளித்தனர்.

வரும் பொதுத் தேர்தலில் கொள்ளையர்கள் மற்றும் துரோகிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்போம் என்று சூளுரைத்தார்.


Pengarang :