ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

முதலாவது சிலாங்கூர் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வழிமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்

சிப்பாங், அக் 30– முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் இடம் பெற்றுள்ள சில
திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழி முறை அடுத்த மாத
இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள 2023 வரவு செலவுத் திட்டத்தில்
அறிவிக்கப்படும்
சபாக் பெர்ணம் வட்டார மேம்பாட்டுத் திட்டம் (சப்டா), தென் சிலாங்கூர்
ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேசம் மற்றும் கெர்பாங் மெரிதிம்
சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) எனப்படும் சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில்
திட்டம் ஆகியவை அதில் அடங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக சிறப்பு செயல்குழு
உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த தகவல் வரும் பட்ஜெட்
தாக்கலின் போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னெடுப்பின் வாயிலாக அனைத்து திட்டங்களையும் விரைவாக
அமலாக்க முடியும் என்பதோடு முதலீடுகளையும் ஈர்க்க இயலும் என்று
அவர் சொன்னார்.
நேற்று இங்கு ரூமா இடாமான் மெலுர் வீடமைப்புத் திட்டத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
இம்மாதம் 15 ஆம் தேதி சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நடைபெற்ற
ஜொலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் போது சப்டா திட்டத்தை
மந்திரி புசார் தொடக்கி வைத்தார்.
தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் 190 கோடி
வெள்ளி மதிப்பிலான இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு 24.6 கோடி வெள்ளி
வருமானம் ஈட்டவும் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இயலும்.

Pengarang :