ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரின் நிதிக் கையிருப்பு வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

ஷா ஆலம், நவ 3- சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட் அரசாங்கம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது பொதுத் தேர்தலில்  கைப்பற்றியது முதல் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் சிறப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பக்கத்தான் சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய போது மாநிலத்தின் நிதிக் கையிருப்பு வெறும் 40 கோடி வெள்ளியாகத்தான் இருந்தது. அதே ஆண்டின் இறுதியில்  கையிருப்பின் மதிப்பு 142 கோடி வெள்ளியாக உயர்வு கண்டது.

இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை மாநிலத்தின் நிதிக் கையிருப்பு வரலாற்றில் முதன் முறையாக 340 கோடி வெள்ளியை எட்டியுள்ளது. பக்கத்தான் அரசாங்கத்தின் மூன்று மந்திரி பெசார்கள் ஆட்சியில் இந்த உயரிய நிதிக் கையிருப்பு பதிவாகியுள்ளது.

டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மந்திரி பெசாராக இருந்த காலத்தில் (2008-2014) மாநிலத்தின் நிதிக் கையிருப்பு 300 கோடி வெள்ளியை எட்டியது. டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நிர்வாகத்தை ஏற்ற காலத்தில் (2014-2018) அதன் கையிருப்பு 213 கோடி வெள்ளியாக குறைந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் பதிவான 80 கோடி வெள்ளி செலவினப் பற்றாக்குறை காரணமாக கையிருப்பு வீழ்ச்சி கண்டது.

டத்தோஸ்ரீ அமிருடின் நிர்வாகத்தில் (2018 முதல் தற்போது வரை) நோய்த் தொற்று பரவலுக்கு மத்தியில் முதல் ஈராண்டுகள் சீரான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. 

அமிருடினின் பணித்திறன் பாராட்டுக்குரியது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பெருந் தொகை செலவிடப்பட்ட போதிலும் சிலாங்கூரின் நிதிக் கையிருப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக 150 கோடி  வெள்ளி வரை செலவிட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் 60 கோடி வெள்ளி நிதியில் பெடுலி ராக்யாட் திட்டம் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் என்ற பெயரில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


Pengarang :