ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் அன்வார் முதலிடம்

ஷா ஆலம், நவ 4- மலேசியாவின் அடுத்த பிரதமருக்கான கருத்துக்
கணிப்பில் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமே முதன்மை தேர்வாக விளங்குகிறார்.
அரசுக்குச் சொந்தமான சிந்தனைக் குழுவான டாருள் ஏசான் கழகம்
(ஐ.டி.இ.) மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் வழி இது தெரியவந்துள்ளது.
வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மக்களின் மனநிலையை
அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக
ஐ.டி.இ. தலைவர் பேராசிரியர் டத்தோ முகமது ரெட்சுவான் ஓத்மான்
கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் 21 முதல் 28 ஆம் தேதி வரை
மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 29.6
விழுக்காட்டினர் அன்வாரை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி
யாக்கோப்பிற்கு 25.9 விழுக்காட்டினரும் பெரிக்கத்தான் நேஷனல்
தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு 20.7 விழுக்காட்டினரும்
ஆதரவளித்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
மலேசிய அரசியல் மீதான ஆய்வின்படி 30 விழுக்காடு என்பது வலுவான
ஆதரவாகும். எனினும், அந்த ஆதரவை வலுப்படுத்திக் கொள்வதற்கு
இன்னும் நிறைய பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் அன்வார் மீதான ஆதரவு
பொதுவாக சிறப்பாக உள்ளதை காண முடிகிறது என்று அன்வாரின் புத்தக
வெளியீட்டு நிகழ்வில் அவர் சொன்னார்.
இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 81 விழுக்காட்டினர்
வாக்களிக்க ஆர்வத்துடன் இருக்கும் வேளையில் 29.2 விழுக்காட்டினர்
எந்த முடிவையும் எடுக்க முடியாத மதில் மேல் பூனைகளாக உள்ளனர்
என்றார் அவர்.

Pengarang :