ECONOMYSELANGOR

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஹராப்பான் சார்பில் போட்டியிட மகளிருக்கு அதிக வாய்ப்பு 

ஷா ஆலம், நவ 8- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் அதிக மகளிரை வேட்பாளர்களாக நிறுத்திய கூட்டணியாக பக்கத்தான் ஹராப்பான் விளங்குகிறது.

பக்கத்தான் ஹராப்பான் போட்டியிடும் 206 நாடாளுமன்றத் தொகுதிகளில் 40 அதாவது 19 விழுக்காடு மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தேசிய முன்னணி களமிறங்கிய 178 தொகுதிகளில் 22 மகளிர் மட்டுமே (12.4 விழுக்காடு) பெண்களாவர்.

மேலும் பெரிக்கத்தான் நேஷனல் போட்டியிடக்கூடிய 149 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் 16 பேராக உள்ள வேளையில் கெராக்கான் தானா ஆயர் கட்சி சார்பில் 11 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர் என்று கெஅடிலான் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவி ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த பதினைந்தாவது பொதுத் தேர்தலில் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஆகவே, அறுபது ஆண்களுக்கும் மேலாக அமலில் இருக்கும் நடைமுறையை மாற்றி தொகுதி இல்லாத பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மகளிரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்குரிய எந்த கூடுதல் அனுகூலத்தையும் நடப்பு நடைமுறை வழங்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுத் தேர்தலில் மகளிருக்கு குறைந்தது 30 விழுக்காட்டு இடங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினருமான ஜூய்ரியா வலியுறுத்தினார்.


Pengarang :