ECONOMYSELANGOR

செக்சன் 16 அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைப்பு செய்ய ஷா ஆலம் ஹராப்பான் வேட்பாளர் திட்டம்

ஷா ஆலம், நவ 8– பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் இங்குள்ள செக்சன் 16, பி.கே.என்.எஸ். மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைப்பு செய்வேன் என்று ஷா ஆலம் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் வாக்குறுதியளித்துள்ளார்.

சுமார் அறுபது ஆண்டுகால பழைமை வாய்ந்த அந்த குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் ஷா ஆலம் மாநகரின் வளர்ச்சிக்கேற்ப வசதியான சூழலில் வசிப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை தாம் முன்வைப்பதாக அவர் சொன்னார்.

இந்த குடியிருப்பை மறுமேம்பாடு செய்வதற்கு சில சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய சாத்தியம் உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ளவர்கள் நகர்ப்புற சூழலுக்கு ஏற்ற வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்ய என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.

பாடாங் ஜாவா மற்றும் கம்போங் கெபுன் பூங்கா போன்ற பகுதிகளும் மறுமேம்பாடு காண்பதற்கான சாத்தியக்கூறுகளை தாம் ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செக்சன் 16 அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதை விடுத்து அப்பகுதி முழுமைக்கும் புதிய தோற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :