ECONOMYSELANGOR

மக்கள் பிரச்சனைகளை அணுகுவதில் கனிவு- சிப்பாங் மக்களின் அபிமானத்தைப் பெறுகிறார் ஹராப்பான் வேட்பாளர்

சிப்பாங், நவ 8– சிப்பாங் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளரான அய்மான் அதிரா சாபுவின் அமைதியும் கனிவும் நிறைந்த பிரசார பாணி தொகுதி மக்களை அவருடன் எளிதில் நெருங்கிப் பழக வைக்கிறது.

பொது மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் “உங்கள் குறைகளைக் கேட்டறிய இங்கு வந்துள்ளேன். குறைகள் என்னவென்று என்னிடம் கூறுங்கள்“ எனக் கூறுவது அவரின் வழக்கமான அணுகு முறையாக உள்ளது.

ஒவ்வொரு மக்கள் சந்திப்பு நிகழ்விலும் சம்பந்தப்பட்ட பகுதிக்கான ஊராட்சி மன்ற உறுப்பினரையும் அய்மான் உடன் அழைத்துச் செல்கிறார். இரு தரப்புக்குமிடையிலான கருத்து பரிமாற்றத்தின் வழி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு இதன் மூலம் கிட்டுகிறது.

இத்தகைய சந்திப்பு நிகழ்வுகளின் போது பொது மக்கள் குறைகளை மட்டும் முன்வைப்பதில்லை. மாறாக. “புவான், கவலைப்படாதீர்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி பெற முடியும்“ என்ற தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் கூறுகின்றனர்.

குப்பைகள் அகற்றப்படாதது, கால்வாய்கள் பராமரிக்கப்படாதது, வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகளை பொறுமையாக  கேட்டறியும் அவர், மக்களின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்பட உறுதிபூண்டுள்ளார்.

எனது நோக்கம் அதிகாரத்தைப் பெறுவதோ சொத்துகளைக் குவிப்பதோ அல்ல. அனைவருக்குமான நாட்டை உருவாக்குவது எனது நோக்கமாகும். எனது முகத்தைக் கண்டால் சிப்பாங் மக்களுக்கு அதிருப்தியும் வெறுப்பும் ஏற்படுவதைக் காண நான் விரும்பவில்லை என்றார் அவர்.

சிப்பாங் தொகுதியில் அய்மான் அதிராவை எதிர்த்து மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹருண் (பெரிக்கத்தான் நேஷனல்), தேசிய முன்னணி வேட்பாளர் அனுவார் பாசிரான் உள்பட எண்மர் போட்டியிடுகின்றனர்.


Pengarang :