ECONOMYSELANGOR

மாநில அரசு நிர்வாகத்தில் பெற்ற அனுபவம் கோம்பாக் தொகுதியில் போட்டியிட தூண்டுகோலாக அமைந்தது-அமிருடின்

கோம்பாக், நவ 8- சிலாங்கூர் மாநிலத்தை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நிர்வாகம் செய்ததன் மூலம் கிடைத்த அனுபவம் வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி போட்டியிடத் தூண்டுகோலாக அமைந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக கிடைத்த அனுபவத்தை புத்ராஜெயா வரை கொண்டுச் செல்ல பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான அவர் உறுதி பூண்டுள்ளார்.

மாநிலத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பணியை நான் திறம்பட ஆற்றியுள்ளேன். புதிய நெறிமுறைகளையும் பொறுப்புகளையும் ஆற்ற வேண்டியுள்ளதால் எனது சேவையை புத்ராஜெயாவிலும் தொடர்வேன் என்று அவர் சொன்னார்.

மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை நாம் செய்துள்ளோம். கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைப் படிப்பினையாக கொண்டு மாநிலத்திலுள்ள அறுபது லட்சம் பேருக்கு இலவச காப்புறுதி பாதுகாப்பை வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு விரிவான  தீர்வை தாங்கள் கண்டுள்ளதாக இங்குள்ள பங்சாபுரி லக்ஸமணா பி குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டு பிரச்சாரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உள்பட பல்லின மக்களைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதால் இம்மாநிலத்தை சிறப்பான முறையில் நிர்வகிப்பது எளிதான காரியமல்ல. அனைத்துலக சமூகத்தையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டதோடு அவர்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கினோம் என்று அவர் தெரிவித்தார்.

அக்காலக்கட்டத்தில் நாம் எண்ணற்றப் பிரச்னைகளை எதிர்நோக்கினோம். உறுதியான மற்றும் ஆக்கத்தன்மையுடன் கூடிய அரசாங்கம் இருந்த காரணத்தால் பிறர் மீது பழியைப் போடாமல் சிறப்பான முறையில் அவற்றுக்குத் தீர்வு கண்டோம் என்றார் அவர்.


Pengarang :