ECONOMYSELANGOR

விலைவாசி உயர்வு பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்- கோல லங்காட் வேட்பாளர் மணிவண்ணன் வாக்குறுதி

ஷா ஆலம், நவ 11- பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு பிரச்சனையை தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாக கோல லங்காட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்  மணிவண்ணன் கோவின் கூறினார்.

தொகுதி மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் போது முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு தொடர்பில் அதிக புகார்களைத் தாம் பெற்றதாக அவர் சொன்னார்.

பொருள் விலையேற்றம் குறித்தும் முட்டை விநியோகப் பற்றாக்குறை குறித்தும் பொது மக்களிடமிருந்து நான் தொடர்ச்சியாக புகார்களைப் பெற்று வருகிறேன் என்று கோல லங்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வரும் பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இளம் தலைமுறையினருக்கு அதிகாரம் அளிப்பதற்கு ஏதுவாக இளைஞர் பேரவையை தாம் நடத்தவுள்ளதாக சிப்பாங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் அய்மான் அதிரா தெரிவித்தார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த பேரவையை நடத்த தாம் பரிந்துரைக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

பொது மக்களுக்கும் இளையோருக்கும் பயன் தரக்கூடிய வகையில் இந்த பேரவை அமையும். அத்தரப்பினர் தங்கள் குறைகளை எடுத்துரைப்பதற்குரிய தளமாகவும் இப்பேரவை விளங்கும் என்றார் அவர்.

அரசியல் கட்சிகளின் இனிப்பு வார்த்தைகளில் மயங்கவிட வேண்டாம் என சுங்கை பூலோ தொகுதி ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர்.ரமணன் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

தலைவராக இருக்கக்கூடியவர்  பொதுமக்களுக்கு உதவுவதற்கான பல்வேறு வழிகளை ஆராயக்கூடியவராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் போல் இனிப்பு வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர் தாம் அல்ல என்றும் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி வேட்பாளர் கைரி ஜமாலுடினின் அரசியல் செயலாளர் சுங்கை பூலோவைச் சேர்ந்தவர்தான். இவ்வளவு நாட்களாக அத்தொகுதி மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அத்தகைய அரசியல்வாதிகளின் இனிப்பான வார்த்தைகளுக்கு மயங்கிவிட வேண்டாம் என கம்போங் பாயா ஜெராசில் அண்மையில் நடைபெற்ற பிரசாரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.


Pengarang :