ECONOMYSELANGOR

மலாய் வாக்காளர்களின் மதிநுட்பத்தை ஏளனம் செய்யாதீர்- பாஸ் கட்சிக்கு ஜசெக அறிவுறுத்து

ஷா ஆலம், நவ. 12 –  தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மலாய் வாக்காளர்களுக்கு உள்ள புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிடுவதை நிறுத்துமாறு பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) மலாய் வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இனி மக்கள் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை ஹாடி அவாங் உணர வேண்டும் என்று ஸூல்ஹாஸ்மி ஷாரிப் (ஜெராய்), கைரில் காலிட் (பூலாவ் மானிஸ்),  ஷெர்லினா அப்துல் ரஷிட் (புக்கிட் பெண்டேரா),  தர்மிஷி முகமது ஜாம் (கரீக்), யோங் ஷியேபுரா ஓத்மான் (பெந்தோங்), ஷியேரெட்ஸான் ஜோஹான் (பாங்கி), ஷேக் ஓமார் (ஆயர் ஹீத்தாம்) ஃபாத்தின் ஜூலைகா ஜைதி (மெர்சிங்), ஷா ஷாஸ்வான் ஸ்டைனல் (பொந்தியான்) மற்றும் பட்ருல் ஹிஷாம் படாருடின் (சங்காட் ஜோங்) ஆகிய வேட்பாளர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறினர்.

மலாய் வாக்காளர்கள் ஜசெகவின் மலாய் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது அவர்கள் முஸ்லீம்கள் என்ற காரணத்திற்காக அல்ல. மாறாக கட்சி பிரதிநிதிகளின் செயல்திறன் மற்றும் சேவைகளின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர் என்று அந்த வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

மலாய் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எளிதாக வெல்லும் இடங்கள் அல்ல. இருப்பினும், 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற உதவுவதற்காக தங்களின் சிறந்த வேட்பாளர்களை ஜசெக களமிறக்கியுள்ளது. இதன் மூலம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர்கள் குறிப்பிட்டனர் .

இருந்த போதிலும் ஜசெகவுக்கு விளம்பரம் அளித்ததற்காகவும் இந்த தேர்தலில்  பல மலாய் வேட்பாளர்களை அக்கட்சி அறிமுகப்படுத்தியதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதற்காகவும் நாங்கள் ஹாடி அவாங்கிற்கு நன்றி கூறுகிறோம்.

உயர்தர மலாய் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் ஜசெகவின் முயற்சிகள் பாஸ் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகளை திகைக்க வைத்துள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் அவ்வறிக்கையில் ஜசெக மலாய் வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Pengarang :