ECONOMYMEDIA STATEMENT

பகாங்கில் 4 சட்டமன்றத் தொகுதிகளை வெல்லவும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளை தக்க வைக்கவும் கெஅடிலான் இலக்கு

குவாந்தான், நவ 16- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில்  வியப்பூட்டும் வகையில் குறைந்தது நான்கு சட்டமன்றத் தொகுதிகளை வெல்லவும் இரு நாடாளுமன்றத் தொகுதிகளை  தக்க வைத்துக் கொள்ளவும் கெஅடிலான் நம்பிக்கை கொண்டுள்ளது.

செமாம்பாவ் மற்றும் தெருந்தோம் சட்டமன்றத் தொகுதிகளையும் குவாந்தான் மற்றும் இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தாங்கள் நம்புவதாக பகாங் மாநில கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெந்தா, இண்ட்ராபுரா, புக்கிட் இபாம், சுங்கை லெம்பிங், செக்கா ஆகியவை பக்கத்தான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இதர தொகுதிகளாகும் என அவர் சொன்னார்.

வெளியூர் வாக்காளர்கள் குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு இங்கு வந்தால் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நாங்கள் இளைஞர்களை இலக்காக கொண்டுள்ளோம். அவர்கள் வீடு திரும்பினால் தங்கள் பெற்றோர்களை மனமாற்றம் செய்ய முடியும் என்று நேற்று இங்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் இண்ட்ரா மக்கோத்தா தொகுதியில் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா கெஅடிலான் சார்பில் வெற்றி பெற்றார். எனினும் அவர் ஈராண்டுகளுக்குப் பின்னர் பெர்சத்து கட்சிக்குத் தாவினார்.

கடந்த காலங்களில் கெஅடிலானுக்கு கிடைத்த எதிர்பாராத வெற்றிகளை  கருத்தில் கொள்கையில் கட்சியின் இந்த இலக்கு சாதிப்பதற்கு அசாத்தியமானது அல்ல. உதாரணத்திற்கு கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சினி சட்டமன்றத் தொகுதியை மிகவும் குறைந்த அதாவது 5 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றோம் என்று அமிருடின் சொன்னார்.


Pengarang :