ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTSELANGOR

பாங்கி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள முடியும்- ஹராப்பான் வேட்பாளர் நம்பிக்கை

ஷா ஆலம், நவ 16- பாங்கி தொகுதியில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவினாலும் வரும் சனிக்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பக்கத்தான் ஹராப்பான் நம்புகிறது.

பாங்கி தொகுதியில் நீண்ட காலமாக தாம் ஆற்றி வரும் சமூகப் பணிகள் வெற்றிக்கான கூடுதல் அனுகூலமாக விளங்குவதாக அத்தொகுதியில் முதன் முறையாக போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளரான ஷியாரெட்ஸான் ஜோஹான் கூறினார்.

எனது தற்போதைய வயது (39) சமூகப் பணியாற்றுவதற்கு பொருத்தமானதாக விளங்குகிறது. அரசியலில் நீண்ட அனுபவம் இல்லாவிட்டாலும் சமூகப் பணிகளில் வெகு நாட்களாக நான் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று அவர் சொன்னார்.

கடந்த மூன்று தவணைகளாக சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் வசமிருப்பது எனக்கு சாதகமாக உள்ளது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவது எளிதாகியுள்ளது என்றார் அவர்.

பாங்கி தொகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் எனது பணிகளைத் தொடக்கி விட்டேன். இதன் மூலம் எனக்கு சாதகமான சூழல் நிலவுவதோடு வெற்றி வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் பாங்கி தொகுதியில் ஹராப்பான் வேட்பாளரான டாக்டர் ஓங் கியான் மிங் 68,768 வாக்குகள் பெரும்பான்மையில் இரு வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.


Pengarang :