ECONOMYSELANGOR

நாட்டைச் சீர்குலைத்த தலைவர்களை மக்கள் நிராகரிப்பதற்கு பொதுத் தேர்தலே சரியான களம்- அன்வார்

பெட்டாலிங், நவ 17- முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நாட்டுத் தலைவர்கள் சிலரை மக்கள் நிராகரிப்பதற்கு பதினைந்தாவது பொதுத் தேர்தல் சரியான களமாக விளங்குகிறது.

மக்களின் நலனைக் காப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாவதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பெரிய மனிதர்களை எதிர்பார்க்க வேண்டாம், மேல் மட்டத்தினரையும் நாட வேண்டாம். மக்களே ஒன்று திரண்டு நமக்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தர முடியும் என்று சுங்கை பூலோ தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர்  சொன்னார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியை பக்கத்தான் ஹராப்பான் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அக்கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்கும்படியும் தொகுதி வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத போதிலும் கட்சிக்கு விசுவாசம் காட்டும் வகையில் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் சுங்கை பூலோ தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவை அன்வார் பெரிதும் பாராட்டினார்.

சுங்கை பூலோ தொகுதி நமது கோட்டையாக முன்பிருந்தே விளங்கி வந்துள்ளது. சிவராசா அதன் கோட்டைகளை மேலும் வலுப்படுத்தினார். அதனை நாம் தற்காக்க வேண்டும் என்று திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுகையில் அன்வார் தெரிவித்தார்.

சிவராசா சிறந்த உதாரணமாக திகழ்கிறார். போட்டியிட்ட போதும் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். போட்டியிடாத போதிலும் கட்சிக்கு விசுவாசமாக உள்ளார். அவர் ஒருபோதும் துரோகமிழைத்ததில்லை. இன்றிரவு அம்பாங் மற்றும் கோம்பாக்கில் துரோக கும்பலை எதிர்த்து பிரசாரம் செய்யவிருக்கிறேன் என்றார் அவர்.


Pengarang :