ECONOMYSELANGOR

தாமான் கிராமாட்டில் ஹராப்பான் பிரசாரம்- மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

அம்பாங், நவ 17- கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய தாமான் கிராமாட்டில் நேற்றிரவு நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் இறுதிச் சுற்றுப் பிரசாரக் கூட்டத்தில் அனைத்து இனங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் இரவு 7.00 முதல் அவர்கள் எம்.பி.ஏ.ஜே. ஏயு7 மண்டபத்தில் கூடத் தொடங்கினர். சிலர் குடையுடனும் மேலும் பலர் முழுக்க நனைந்த நிலையிலும் ஹராப்பான் தலைவர்களின் உரையைக் கேட்க ஆவலுடன் திரண்டிருந்தனர்.

ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கோம்பாக் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உரையாற்றிய போது பெருந்திரளாக கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் “ரிபோர்மாசி” மற்றும் “கித்தா பேலே” முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருந்தன.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஷெரட்டோன் நகர்வின் மூலம் பக்கத்தான் ஆட்சியைக் கவிழ்த்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை மையமாக கொண்டு துரோகிகளை ஒழிப்போம் என்ற பிரதான தலைப்புடன் இந்த பேரணி நடத்தப்பட்டது.

மழை கடுமையாகப் பெய்த போதிலும் கோம்பாக் மக்கள் மிகவும் உஷ்ணத்துடன் உள்ளனர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். துரோகிக்கு படிப்பினை தந்து கோம்பாக்கிலிருந்து விரட்டியடிப்பதற்காக நான் கோம்பாக் வந்துள்ளேன் என்று கூட்டத்தினரின் பலத்த கரவொலிக்கிடையே டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் உறுதியுடன் நிற்பது கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நினைவூட்டுவதாக உள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் தமதுரையில் கூறினார்.


Pengarang :