ECONOMYSELANGOR

பொதுத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை- நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு

கோலாலம்பூர், நவ 18- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் காரணத்தால் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

பிளஸ் எனப்படும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் தடத்தில் நேற்று மாலை முதல் போக்குவரத்து நெரிசல் தொடங்கி விட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.

சுங்கை பூலோ முதல் ரவாங் வரையிலான 10 கிலோமீட்டர் பகுதி, தஞ்சோங் மாலிம் முதல் பெஹ்ராங் வரையிலானப் பகுதி, சுங்கை முதல் பீடோர் வரையிலானப் பகுதி, தாப்பா முதல் கோப்பெங் வரையிலானப் பகுதி ஜூரு ஆட்டோ சிட்டி முதல் பிறை வரையிலானப் பகுதிகளில் சாலைகள் நெரிசல்மிகுந்த காணப்படுவதாக அவர் சொன்னார்.

கிழக்கு கரை நோக்கிச் செல்லும் சாலையைப் பொறுத்த வரை கோம்பாக் டோல் சாவடி தொடங்கி கெந்திங் செம்பா வரையிலும் புக்கிட் திங்கி முதல் லெந்தாங் வரையிலும் பெந்தோங் முதல் காராக் வரையிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

பிளஸ் நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 269.0 கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்து காரணமாக நீலாய் முதல் பண்டார் அய்ன்ஸடேல் வரையிலான பகுதியில் வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் காண முடிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :