ECONOMY

பள்ளி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாள்களுக்காகக் கேடிஎம்பின் கூடுதல் இரயில் சேவை

கோலாலம்பூர், நவ 25; வரவிருக்கும் பள்ளி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாள்களுக்காகக் கோலாலம்பூர்-பாடாங் பெசார்-கோலாலம்பூர் வழித்தடத்திற்கு இரண்டு கூடுதல் பிளாட்டினம் மின்சார இரயில் சேவையைக் (ETS) கேடிஎம்பி (KTMB) வழங்குகிறது.

கேடிஎம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த சேவை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை அதாவது டிசம்பர் 9 முதல் 12 வரை, டிசம்பர் 16 முதல் 19 வரை, டிசம்பர் 16 முதல் 19 வரை, டிசம்பர் 23 முதல் 26 வரை மற்றும் டிசம்பர் 30 முதல் அடுத்து ஆண்டு ஜனவரி 2 வரை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

ஈப்போ, பட்டர்வொர்த், அலோர் ஸ்டார், மற்றும் பாடாங் பெசார் போன்ற இடங்களின் அதிக தேவையை ஈடுக்கட்ட இன்னும் இரயிகள் சேர்க்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் இரயில்களுக்கான 10,080 டிக்கெட்டுகள் இன்று விற்பனைக்கு வரும். இன்றைய நிலவரப்படி, வார இறுதியில் கோலாலம்பூர் சென்ட்ரல்-பாடாங் பெசார்- கோலாலம்பூர் சென்ட்ரல் பிரிவில் 55 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

இந்நிலை பள்ளி விடுமுறை மற்றும் பொது விடுமுறைகளின் போது தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வேறு இடங்களுக்குச் செல்லும் இரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கைத்தொலைபேசியில் உள்ள கேடிஎம்பி சேவையை அல்லது அதன் இணைத்தளம் மூலம் டிக்கெட்டுகளை வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :