ECONOMYSELANGOR

நீர் கையிருப்பை 15 விழுக்காடாக அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை

ஷா ஆலம், நவ 25- நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை கடுமையாக கருதும் சிலாங்கூர் அரசு மாநிலத்தில் நீர் விநியோக கையிருப்பை 15 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் மாநிலத்தில் நீர் கையிருப்பு 13.6 விழுக்காடாக இருந்தாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுத்திகரிக்கப்படாத மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீர் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது குறிப்பிட்டார்.

இதன் ஒரு பகுதியாக ராசாவ் நீர் விநியோகத் திட்டம் 400 கோடி வெள்ளி செலவில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.  இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டன. வரும் 2025ஆம் ஆண்டு முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 700 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை உற்பத்தி செய்ய முடியும் என அவர் சொன்னார்.


Pengarang :