ANTARABANGSAECONOMYNATIONAL

இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை மலேசியா-புருணை ஆராயும்

புத்ரா ஜெயா, நவ 28- மலேசியாவும் புருணை டாருள்சலாமும் நடப்பு ஒத்துழைப்பினை  மதிப்பீடு செய்யும் அதே வேளையில் இரு தரப்புக்கும் நன்மை தரக்கூடிய வகையில் உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் கண்டறியும்.

மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள புருணை சுல்தான் ஹஸசானால் போல்கியாவுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே இன்று இங்கு நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக புருணை சுல்தான் விளங்குகிறார்.

இளவரசர் அபதுல் மத்தீன் போல்கியா மற்றும் உயர்மட்டக் குழுவினருடன் மலேசியா வந்துள்ள சுல்தான் ஹஸனால் போல்கியாவுக்கு  பிரதமர் மதிய விருந்து வழங்கி கௌரவித்தார்.

பாரம்பரியம், கலாசாரம், மற்றும் மனுக்குல உறவு உள்ளிட்ட அம்சங்களில் ஒன்று பட்டுள்ள மலேசியாவும் புருணையும் நீண்ட காலமாக சிறப்பான உறவை பேணி வருவதாக விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கடந்த 2021ஆம் ஆண்டு தரவுகளின்படி மலேசியாவின் 30வது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக புருணை விளங்குகிறது. ஆசியானின் ஆறாவது வர்த்தக பங்காளியாக விளங்கும் இந்நாடு மலேசியாவுடன் 803 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.  


Pengarang :