ECONOMY

சிலாங்கூரிலுள்ள 742 பள்ளிகளுக்கு வெ.2.6 கோடி மானியம்- சிலாங்கூர் அரசு வழங்கியது

ஷா ஆலம், டிச 1- சிலாங்கூர் அரசின் பள்ளி உதவித் திட்டத்தின் கீழ்
இவ்வாண்டில் 742 பள்ளிகளுக்குச் சுமார் 2 கோடியே 60 லட்சம் வெள்ளி
மானியம் வழங்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 222 பள்ளிகள் 70 லட்சத்து 40
ஆயிரம் வெள்ளியைப் பெற்ற வேளையில் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள
134 பள்ளிகளுக்கு 61 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவைத் தவிர உலு லங்காட் மாவட்டத்தில் 102 பள்ளிகளும் (வெ.39 லட்சம்),
கோலச் சிலாங்கூரில் 68 பள்ளிகளும் (வெ.19.9 லட்சம்) கோம்பாக்
மாவட்டத்தில் 65 பள்ளிகளும் (வெ.17.9 லட்சம்), கோல லங்காட்டில் 49
பள்ளிகளும் (வெ.17.4 லட்சம்), சிப்பாங்கில் 35 பள்ளிகளும் (வெ.13.2 லட்சம்),
சபாக் பெர்ணமில் 28 பள்ளிகளும் (வெ.856,000) இத்திட்டத்தின் கீழ்
நிதியுதவி பெற்றன என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பள்ளி உதவித் திட்டத்திற்காகக் கிட்டத்தட்ட 2 கோடியே 60 லட்சம்
வெள்ளியை நாங்கள் செலவிட்டுள்ளோம். மேலும் ஒரு லட்சம் வெள்ளி
எஞ்சியிருக்கிறது. விண்ணப்பங்கள் முழுமையாக இல்லாத காரணத்தால்
இந்த தொகை விடுபட்டிருக்கலாம். எனினும், இதற்கு விரைந்து தீர்வு
காண்போம் என அவர் குறிப்பிட்டார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது அமிருடின்
இதனைத் தெரிவித்தார். முன்னதாக, உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்த
பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொகை குறித்து
பண்டமாரான் தொகுதி உறுப்பினர் லியோங் தக் சீ கேள்வியெழுப்பியிருந்தார்.

இது தவிர, கடந்த ஜூன் மாதம் உலு லங்காட்டில் தொடங்கி அக்டோபர்
30ஆம் தேதி சிப்பாங்கில் முடிவடைந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்
பயணத் தொடரின் போதும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டதாக
மந்திரி புசார் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 225 சீன, தமிழ்ப் பள்ளிகள், சீனத் தனியார்
இடைநிலைப்பள்ளிகள், தேசிய இடைநிலைப் பள்ளிகள் மற்றும் சமயப்
பள்ளிகளுக்குக் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நிதி வழங்கப்பட்டது என்றார்
அவர்.


Pengarang :