ALAM SEKITAR & CUACA

வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைச் சமாளிக்க, உபகரணங்களுடன் தற்காலிகத் தங்கும் மையங்கள் தயார்

சுபாங் ஜெயா, டிச 1: வசதிகள் கொண்ட தற்காலிக தங்கும் மையத்தை ஏற்பாடு செய்வது உட்பட இந்த மாதம் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளச் சுபாங் ஜெயா நகரச் சபை (MBSJ) தயாராகி வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகள் கம்போங் புக்கிட் லாஞ்சோங், புத்ரா ஐட், கம்போங் தெங்கா மற்றும் கம்போங் குவாலா சுங்கை பாரு ஆகியவையாகும் என்று மேயர் டத்தோ ஜோஹரி அனுவார் கூறினார்.

“இம்முறை கூடாரங்கள் அமைத்து, தலையணை, மெத்தை, போர்வைகள் கொடுத்து, உணவுப் பொருட்களைச் சரியான முறையில் விநியோகம் செய்வதற்கு ஏற்ப அம்மையங்களைத் தயார் செய்துள்ளோம்“

“இந்த டிசம்பரில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள பல்வேறு ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் நாங்கள் ஆயத்தங்களைச் செய்து வருகிறோம்,” என்று நேற்று  எம்பிஎஸ்ஜெ (MBSJ முழு கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) கிராமப் பகுதிக்குள் தண்ணீர் பாய்வதைத் தடுக்க உயரமான கரைகளை கட்டியதாகவும், தண்ணீர் பம்புகளை வழங்கியுள்ளதாகவும் ஜோஹரி கூறினார்.

நெடுஞ்சாலைப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் வடிந்தோட மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (LLM),  வடிகால் அமைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நவம்பர் பாதியிலிருந்து டிசம்பர் வரை சிலாங்கூரில் 100 முதல் 400 மில்லிலிட்டர் வரை அதிக மழைவீதம் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


Pengarang :