ECONOMY

தாமான் செந்தோசா நகரமாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்- சட்டமன்றத்தில் குணராஜ் வலியுறுத்து

ஷா ஆலம், டிச 1- கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசா பகுதி
சுற்றுவட்டார குடியிருப்புகளின் வளர்ச்சிக்கேற்ப நகரமாக தரம்
உயர்த்தப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்
குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

சுமார் இருபது குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த தாமான்
செந்தோசா அருகிலுள்ள நகரங்களான பண்டார் பொட்டானிக் மற்றும்
பண்டார் புக்கிட் திங்கியைப் போல் நவீன தோற்றத்துடன் கூடிய நகரமாக
மேம்படுத்தப்படுவது அவசியம் என்று மாநில சட்டமன்றத்தில் நேற்று
அவர் தெரிவித்தார்.

தாமான் செந்தோசா குடியிருப்பு இருபது தாமான்களை உள்ளடக்கிய
பழைய மேம்பாட்டுப் பகுதியாக விளங்குகிறது. இது அடர்த்தியான
குடியிருப்புகளையும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகையையும்
கொண்டுள்ளது.

ஆகவே. தாமான் செந்தோசா நகரமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம். இதன் மூலம் இந்த
குடியிருப்புக்கு புதுப்பொலிவு கிட்டும் என்பதோடு ஊராட்சி மன்றங்களின்
சேவையையும் தரம் உயர்த்த இயலும். இது தவிர, அனைத்து
வசதிகளுடன் கூடிய வசிப்பதற்கு உகந்த இடமாக இதனை மாற்றவும்
இயலும் என்றார் அவர்.

தாமான் செந்தோசாவிற்கு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய இந்த
திட்டம் தொடர்பான தமது பரிந்துரை மீது மாநில அரசு உரிய கவனம்
செலுத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :