ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ள அபாயம் உள்ள 50 இடங்கள்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், டிச 1- சிலாங்கூரில் வெள்ளம் அல்லது பேரிடர் அபாயத்தை எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ள 50 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

எனினும், வானிலையைப் பொறுத்தே இவ்விடங்களின் எண்ணிக்கை அமையும் என்று அவர் சொன்னார்.

வெள்ள அபாயம் உள்ள இடங்கள் அவ்வப்போது மாறுபடும். தற்போதைக்கு 50 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். ஒரு இடத்தில் பிரச்சனையைச் சரி செய்தால் இன்னொரு இடத்தில் பிரச்சனை தோன்றி விடுகிறது.

இதுவே எங்களுக்குச் சுமையளிக்கும் விஷயமாக உள்ளது என்றார் அவர்.

ஆகவேதான், குறுகியக் கால, மத்தியக் கால மற்றும் நீண்டகால அடிப்படையில் அமல்படுத்தக்கூடிய விரிவான நீர் மேலாண்மை அவசியம் என நாங்கள் கருதுகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்ட அமலாக்கத்தில் கால்வாய், மற்றும் வடிகால் தொடர்புடைய சுற்றுச்சூழல் நட்புறவு வடிகால் பெருந் திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்படாத நீர் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம் என அவர் சொன்னார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று சிலாங்கூரில் வெள்ளம் அபாயம் உள்ள பகுதிகள் குறித்து சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :