ECONOMY

இவ்வாண்டு ஜூன் வரை 118 தொழில்துறைத் திட்டங்களுக்குச் சிலாங்கூர் ஒப்புதல்

ஷா ஆலம், டிச 1- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தித் திட்டங்களுக்கு சிலாங்கூர் ஒப்புதல் அளித்துள்ளது.

அக்காலக்கட்டத்தில் சிலாங்கூரில் மொத்தம் 118 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இத்திட்டங்களின் முதலீட்டு மதிப்பு 488 கோடி வெள்ளி ஆகும். அதே சமயம் ஜோகூர் மாநிலம் 667 கோடி வெள்ளி மதிப்பிலான 68 திட்டங்களை ஈர்த்துள்ளது என அவர் சொன்னார்.

ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  இடங்கள், துறைமுக வசதி மற்றும் விரிவான சாலை ஒருங்கமைப்பு உட்பட இரு மாநிலங்களும் ஒரே மாதிரியான பலங்களைக் கொண்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

முதலீட்டை ஈர்ப்பதில் சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஒரே அளவிலான பலம் கொண்டவை.  ஜோகூரில் தொழில்துறை பகுதி தொழிலாளர் தங்குமிட வசதிகளுடன் முழுமையாக உள்ளது, மேலும் சிலாங்கூரை விட தொழில்துறை நிலத்தின் விலையும் மிகவும் மலிவானது என்று இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற கூட்டத்தில் அவர் கூறினார்.

சிலாங்கூரில் முதலீடுகள் ஜோகூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் குறித்து சுங்கை பூரோங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷம்சுடின் லியாஸ் எழுப்பி கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கிடையில், தேவைப்பட்டால் சுங்கை பூரோங் மற்றும் கோலா சிலாங்கூர் போன்ற கிராமப்புறங்களில் முதலீட்டை அதிகரிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக தெங் சாங் கிம் கூறினார்.


Pengarang :