ECONOMYHEALTHNATIONAL

மிகுதியாக உள்ள தடுப்பூசிகளை அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்க சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், டிச 1- தன்வசம் மிகுதியாக உள்ள கோவிட்-19 தடுப்பூசிகளை இன்னும் தடுப்பூசி பெறாத அந்நிய நாட்டினருக்கு வழங்க சிலாங்கூர் அரசு உத்தேசித்துள்ளது.

செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட அந்த தடுப்பூசிகளை அந்நிய நாட்டினருக்கு வழங்குவது தவிர்த்து வெளிநாடுகளுக்கு விற்பதற்கான சாத்தியத்தையும் மாநில அரசு ஆராய்ந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தடுப்பூசியின் தேவை ஓரளவு நமக்கு இன்னும் இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் எல்லைகள் எதிர்காலத்தில் திறக்கப்படும் போது இன்னும் தடுப்பூசி பெறாத வெளிநாட்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நாம் செல்வேக்ஸ் தடுப்பூசிகளை விநியோகிக்கலாம் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று செல்வேக்ஸ் திட்டம் குறித்து சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மந்திரி புசார் இவ்வாறு கூறினார்.

மாநில மக்களை கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றும் நோக்கில் மாநில அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 கோடி வெள்ளி மதிப்பில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்தது.


Pengarang :