NATIONAL

அவதூறான உரை தொடர்பில் பேராக் பாஸ் கட்சி ஆணையருக்கு எதிராக அன்வார் வழக்கு

கோலாலம்பூர், டிச 6- ஓரினச்சேர்க்கை, இருபாலின மற்றும் திருநங்கை உறவு கலாச்சாரம் மற்றும் கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரிப்பதாக கூறப்படும் பேச்சு தொடர்பில் பேராக் மாநிலப் பாஸ் கட்சி ஆணையர் ரஸ்மான் ஜக்காரியாவுக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.

எஸ்.என். நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் வாயிலாக தைப்பிங் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மனுவை ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் அவர் குனோங் செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினரான ரஸ்மானை ஒரே பிரதிவாதியாக அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 6ஆம் தேதி தெபோக் பஞ்சுர் பாசார் மாலாம் பகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது மேற்கண்ட அவதூறான கருத்துக்களை ரஸ்மான் வெளியிட்டதாக அன்வார் தனது மனுவில் கூறியுள்ளார்.

ரஸ்மானின் இந்த உரை பிரதிவாதியின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.  அதை 94,400 பேர் பார்த்துள்ளது அந்த பதிவு குறித்து 5,100 க்கும் மேற்பட்டோர் எதிர்வினையாற்றி உள்ளனர். மேலும், 429 பேர் இதனைப் பகிர்ந்துள்ள வேளையில் 2,600 பேர் இதன் தொடர்பில் கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் வழி வெளியிடப்பட்ட இந்த காணொளி பின்னர் இணைய ஊடகம் ஒன்றில் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்ட தாகவும் அவர் சொன்னார்.

தேர்தல் பிரசாரத்தின் போது குரோதத்தை வளர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதன் மூலம் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் 4ஏ விதிகளை பிரதிவாதி மீறியுள்ளார். மேலும் தனது இந்த செய்கைக்காக மன்னிப்பு கோரவும் அவர் தவறியுள்ளார்.

ஆகவே, பொது இழப்பீடு மற்றும் படிப்பினைத் தொகை, செலவுத் தொகை மற்றும் இதர நிவாரணங்களைப்  பிரதிவாதி வழங்க வேண்டும் என்பதோடு இத்தகைய அவதூறான கருத்துக்களை வெளியிட அதிலிருந்தும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அன்வார் தனது மனுவில் கூறியுள்ளார்.


Pengarang :