ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆக குறைந்தது

ஷா ஆலம், டிச 6-  சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று மாலை  4.00 மணி நிலவரப்படி 13 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில்  தஞ்சமடைந்துள்ளனர்.

சிலாங்கூர், பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு 
காரணமாக  மொத்தம் 295 பேர் ஐந்து நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) முகநூல் மூலம் அறிவித்தது.

பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 262 பேர் இரண்டு துயர் துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெர்லிஸில்  நான்கு பேர் கொண்ட ஒரு  குடும்பத்தினர் நிவாரண மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி லங்காட் ஆற்றில் நீர்ப் பெருக்கெடுத்ததால்  கம்போங் புக்கிட் சாங்காங் மற்றும் பந்திங்கில் உள்ள சில தாழ்வான பகுதிகள் 
இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக என்று கோல லங்காட் நகராணமைக் கழகம் தெரிவித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளும் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளப் போதிலும்  நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அந்த ஊராட்சி மன்றம் கூறியது.

ஜாலான் இமாஸ் கீரி, ஜாலான் பேராக் கீரி, ஜாலான் தெம்பாகா, ஜாலான் பேராக் கானான், ஜாலான் இமாஸ் கானான் மற்றும் புக்கிட் செர்டாங் ஆகிய வழித்தடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஜாலான் புக்கிட் செர்டாங் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அச்சாலை 
வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

Pengarang :