ECONOMY

பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி

ஷா ஆலம் டிச 6– சந்தையில் நிலவும் முட்டைப் பற்றாக்குறைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான குறுகிய கால  நடவடிக்கையாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு சில வெளி ஆதாரங்களை அடையாளம் கண்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நோய் பாதிப்பில் இருந்து விடு பட்டவையாகவும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிருப்பதையும் தமது தரப்பு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் முகமது சாபு கூறினார்.

முட்டையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் நோக்கம் உணவு மூலப் பொருள் விநியோகம் தடைபடாமல் இருப்பதையும் மக்களின் நலனை பாதுகாப்பையும் உறுதி செய்வதே தவிர உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நெருக்குதல் தருவதல்ல என்று அவர் விளக்கினார்.

இந்த நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராயும்படி அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், சிறு விநியோகிப்பாளர் கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உதவும் திட்டங்களை முன் வைக்கும்படியும் அக்ரோபேங்க் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பல்வேறு தரப்பினருடனான ஒத்துழைப்பின் மூலம் முட்டை பற்றாக்குறைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள சில்லரை வியாபாரிகள் மற்றும் பொது சந்தை வணிகர்கள் கோழி முட்டைப் பற்றாக்குறைப் பிரச்சனையை கடந்த இரு மாதங்களாக எதிர்நோக்கி வருகின்றனர்.


Pengarang :