ECONOMY

தூய்மையற்ற உணவகங்களுக்கு எதிராக கிள்ளான் நகராண்மைக் கழகம் அதிரடிச் சோதனை

கிள்ளான், டிச 8- உணவகங்களில் தூய்மை பராமரிக்கப்படுவது உறுதி
செய்வதற்காக கிள்ளான், லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில்
கிள்ளான் நகராண்மைக் கழகம் அதிரடிச் சோதனையை மேற்கொண்டது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந் நடவடிக்கையின் போது ஜாலான்
துங்கு கிளானா மற்றும் ஜாலான் மோஹேட்டில் உள்ள கெராய் மேடான்
கிளானாவில் உள்ள 13 உணவகங்கள் சோதனைக்குட் படுத்தப்பட்டதாக
கிள்ளான் நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இச் சோதனை நடவடிக்கையின் போது 12 உணவகங்கள் 50க்கும்
குறைவான புள்ளிகளைப் பெற்றதோடு அவை எந்த தரச் சான்றையும்
பெறுவதற்குரிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை என அது தெரிவித்தது.

வர்த்தக வளாகங்களில் தூய்மைப் பேண படாத காரணத்தால் 2007 ஆம்
ஆண்டு (எம்.பி.கே.) உணவுக் கூட லைசென்ஸ் துணைச் சட்டத்தின்
62(1)வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட உணவகங்களை கடந்த 6ஆம் தேதி
தொடங்கி 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது என்று அந்த பதிவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நடவடிக்கையின் போது உணவகம் ஒன்று அசுத்தமாக காணப்  பட்டதைத்   தொடர்ந்து அதன் உரிமையாளருக்கு குற்றப் பதிவும்  வெளியிடப்பட்டது.
உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 83 விழுக்காட்டு மதிப்பெண்களைப் பெற்ற ஒரு உணவகத்திற்கு “பி“ தரச் சான்றும் வழங்கப்பட்டது.


Pengarang :