ECONOMY

சம்மன்களை அலட்சியம் செய்த பஸ் நிறுவன உரிமையாளருக்கு  வெ.1,900 அபராதம்- நீதிமன்றம் தீர்ப்பு

ஷா ஆலம், டிச 8- ஊராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட 29 சம்மன்களுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறிய பஸ் நிறுவன உரிமையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

கடந்தாண்டில் தாமான் யாயாசான் ஜென்ஜாரோம் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் பஸ்சை நிறுத்தி வைத்த குற்றத்திற்காக 50 வயதுடைய அதன் உரிமையாளருக்கு எதிராக குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகம் கூறியது.

நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட அந்த பஸ்  நிறுவன உரிமையாளர், நேற்று வழக்கறிஞர் துணையின்றி நீதிமன்றம் வந்ததாக அது தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

மாஜிஸ்திரேட் கைருள் ஃபாஹ்ரி யூசுப் முன்னிலையில் தமக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த பஸ் நிறுவன உரிமையாளர் ஒப்புக் கொண்டார்.

இக்குற்றத்திற்கு 700 வெள்ளி அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால் ஓரு மாதச் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் நிலுவையில் உள்ள 1,200 வெள்ளி அபராதத் தொகையையும் நகராண்மைக் கழகத்திற்கு செலுத்த உத்தரவிட்டது என அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :