ECONOMY

தொழில் முனைவோருக்கு உதவ வியூகங்களை வகுப்பீர்- ஊராட்சி மன்றங்களுக்கு வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, டிச 10- தொழில் முனைவோர் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக வியூகத் திட்டங்களை வகுக்கும்படி சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் வகுத்துள்ள 2021-2030 ஆண்டு பெட்டாலிங் ஜெயா தொழில் முனைவோர் மேம்பாட்டு வியூக திட்டத்தை மற்ற ஊராட்சி மன்றங்களும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தொழல் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

தொழில் முனைவோருக்கு உகந்த மற்றும் அவர்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு உதவக்கூடிய இத்திட்டத்தை அமல்படுத்திய முதல் ஊராட்சி மன்றமாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

இலக்கவியல் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை வர்த்தகர்கள் பெறுவதற்கு உதவும் கடப்பாட்டை ஊராட்சி மன்றங்கள் கொண்டுள்ளன. அதேவேளையில், அமலாக்கப் பணிகளிலும் அவை உறுதியாக உள்ளன என்று அவர் சொன்னார்.

இங்குள்ள சிவிக் சென்டரில் நேற்று நடைபெற்ற 2022ஆம் ஆண்டிற்கான பெட்டாலிங் ஜெயா தொழில் முனைவோர் விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விருதளிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தை தாம் பெரிதும் பாராட்டுவதாக கூறிய அவர், இதில் பங்கேற்றுள்ள தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளை மற்ற தொழில் முனைவோர் முன்மாதிரியாக கொள்ள முடியும் என்றார்.


Pengarang :