ECONOMYSELANGOR

மூன்று மாத மலிவு விற்பனையால் இரண்டு மில்லியன் சிலாங்கூர் குடிமக்கள் பயனடைந்தனர், RM16 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை பதிவு

ஷா ஆலம், டிச 14: கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மூன்று மாதக் காலப்பகுதியில் ஜெலாஜா எஹ்சான் ரக்யாத் (JER) திட்டத்தைச் செயல் படுத்துவதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

56 மாநிலச் சட்ட மன்றங்களை சுற்றியுள்ள 693 இடங்களை உள்ளடக்கிய இத் திட்டத்தில் அடிப்படைப் பொருட்கள்  மலிவு விலையில்  விற்பனை செய்யப்பட்டது. அத்திட்டம் RM16 மில்லியனுக்கும் அதிகமான விற்பனை மதிப்பு பதிவு செய்துள்ளது என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

“இந்தத் திட்டமானது RM5 மில்லியனுக்கும் அதிகமான மானியத்தை உள்ளடக்கியது. இந்தத் தொகை மூலம், பல குடியிருப்பாளர்களுக்கு சமையலறை பொருள்களை வாங்கும் சுமையைக் குறைக்க உதவுகிறது  என்றார்.

நேற்று ஜேஇஆர் பாராட்டு விழாவுக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், “இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம், எதிர்காலத்திலும் தொடர வேண்டும்” என்றார்.

செப்டம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வொரு நாளும் ஒன்பது மாவட்டங்களில் மலிவு  விற்பனை வெற்றிகரமாக நடத்த மாநில அரசு RM10 மில்லியன் ஒதுக்கியது.

ஜேஇஆர் 2.0 அடுத்த ஜனவரி 15 முதல் இன்னும் மூன்று மாதங்களுக்குத் தொடரும் என்றும் 800,000 குடியிருப்பாளர்களை இலக்காகக் கொண்டு RM15 மில்லியன் வரை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமிருடின் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டமானது விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம், மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (Fama) மற்றும் சிலாங்கூர் ஹிஜ்ரா கூட்டுறவு (KoHijrah) ஆகியவற்றின் ஒத்துழைப்பை கொண்டிருக்கும்.


Pengarang :