ALAM SEKITAR & CUACANATIONAL

மழைக்காலத்தில் ஆபத்தான பகுதிகளில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை தவிர்க – தீயணைப்பு துறை

ஜோகூர் பாரு, டிச 14: மழைக்காலத்தில் நீரில் மூழ்கும் அபாயம் மற்றும் அடிக்கடி நீர் ஏற்றம் அதிகமாகும் பகுதிகளில், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

மலைகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவை அபாயகரமான பகுதிகளில் அடங்கும் என மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) ஜெனரல் டைரக்டர் டத்தோஸ்ரீ முகமட் ஹம்டான் வாஹிட் கூறினார்.

“பள்ளி விடுமுறையைத் தொடர்ந்து மக்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளலாம். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் (மழைக்காலம்) அந்நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்“.

இதற்கிடையில், வெள்ளம் தொடர்பாக மலேசியா முழுவதும், குறிப்பாக கிழக்கு கடற்கரையில் உள்ள மாநிலங்களில் மொத்தம் 4,795 அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே, முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பொதுமக்கள், குறிப்பாக அப்பகுதியில் உள்ளவர்கள், எப்போதும் தயார் நிலையில் இருக்கவும், அதிகாரிகள் அளிக்கும் எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சாலை துண்டிப்பு மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் மக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என்றார்.

பகாங், பேராக், திராங்கானு, ஜோகூர், கிளந்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, 22 தற்காலிக தங்குமிடங்களில் மொத்தம் 2,763 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

“நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மற்றும் மலேசிய வானிலையியல் துறை ஆகியவற்றுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் வானிலை மற்றும் நீர் நிலைகள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் நாங்கள் பெறுகிறோம்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :