ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி- அரசு அனுமதி

புத்ராஜெயா, டிச 16- வெளிநாடுகளிலிருந்து முட்டையை தற்காலிக அடிப்படையில் இறக்குமதி செய்ய விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் முட்டை விநியோகம் சீரானதும் இந்த இறக்குமதி அனுமதி மறுஆய்வு செய்யப்படும்.

அண்மைய சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் முட்டைப் பற்றாக்குறைப் பிரச்சனையைக் கருத்தில்  கொண்டு வான் மார்க்கமாக இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக இந்த வான் மார்க்க இறக்குமதிக்கு பரீட்சார்த்த முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அது தெரிவித்தது.

இந்த முட்டை இறக்குமதி விவகாரத்தில் நாட்டின் நுழைவாயிலில் எச்.டி.ஆர். எனப்படும் நிறுத்தி, சோதனையிட்டு, வெளியேற அனுமதிக்கும் நடைமுறையை அமைச்சு  மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை சேவைத் துறை (மக்கிஸ்) மற்றும் கால்நடைச் சேவைத் துறை மூலம் அமல்படுத்தி வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் மீது பி.சி. சோதனை மேற்கொள்ளப்படும் அதே வேளையில் சல்மோனெல்ல பாக்டீரியா, நியுகாஸல் நோய் வைரஸ், ஏவியன் காய்ச்சல் ஆகியவற்றின் அறிகுறிகள் மீதான சோதனையும் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பாதுகாப்பானவையாகவும், சுத்தமானவையாகவும்  ஹாலால் மற்றும் நோயிலிருந்து விடுபட்டவையாகவும் உள்ளதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அது கூறியது.

உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்களுக்கு நெருக்குதல் தரும் நோக்கில் இந்த இறக்குமதி செய்யப்படவில்லை. மாறாக அந்த உணவு மூலப் பொருளின் விநியோகம் சீராகவும் நியாயமான விலையிலும் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.


Pengarang :