ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் சுமார் 20,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம்

ஷா ஆலம், டிச 19- வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கிளந்தான் மற்றும் திரங்கானுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 19,543 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

திரங்கானு மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 3,221 குடும்பங்களைச் சேர்ந்த 11,059 பேர் ஏழு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.

கிளந்தான் மாநிலத்தில் 2,468 குடும்பங்களைச் சேர்ந்த 8,484 பேர் ஒன்பது துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

மேலும், ஜொகூர் மாநிலத்தில் 75 பேரும் பேராக்கில் 49 பேரும் பகாங்கில் 40 பேரும் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் ஆறு இடங்களில் வெள்ளம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதோடு நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் இரவு வரை கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங்கில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


Pengarang :