ALAM SEKITAR & CUACANATIONAL

வெள்ளம்- பெசுட் மாவட்டத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது

மாராங், டிச 20- பெசுட் மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அம்மாவட்டத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்திலுள்ளச் சாலைகள் அனைத்தும் நேற்று தொடங்கி அனைத்து விதமான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீ பாதுகாப்பு பிரிவு இயக்குநர் டத்தோ அகமது இஸ்ராம் ஓஸ்மான் கூறினார்.

திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பெசுட் விளங்கி வருவதோடு அங்கு இதுவரை 5,492 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

மொத்தம் 1,506 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 83 துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலவரம் தொடர்பான விளக்கமளிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உலு திரங்கானு பகுதியை வான் வழியாகப் பார்வையிட்டார். இப்பகுதியில் பள்ளிகள், வீடமைப்புப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

எனினும், பெசுட் மாவட்டத்தை வான் வழியாக பார்வையிட அவர் மேற்கொண்ட முயற்சிகள் மோசமான வானிலை காரணமாகத் தடைப்பட்டது.


Pengarang :