ECONOMYSELANGOR

மக்கள் சுமையைக் குறைக்க மலிவு விற்பனைக்கு வெ.61.6 லட்சம் உதவித் தொகை- பி.கே.பி.எஸ். வழங்கியது

ஷா ஆலம், டிச 20- இவ்வாண்டு செப்டம்பர் முதல் நேற்று முன்தினம் வரை ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் வழி சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) 1 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை வருமானமாக ஈட்டியது.

அந்த தொகையில் 61 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மக்களின் சுமையைக் குறைப்பதற்காக உதவித் தொகையாக வழங்கப்பட்டதாக பி.கே.பி.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இவ்வாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 693 இடங்களில் இந்த முதல் கட்ட மலிவு விற்பனை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த முதல் கட்ட விற்பனைக்குப் பொது மக்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவின் அடிப்படையில் இத்திட்டத்தை மாநில அரசு தொடர்கிறது. சமையல் பொருள்களை நியாயமான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை இத்திட்டம் பொது மக்களுக்கு
வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மலிவு விற்பனையை மேற்கொள்ள
மாநில அரச ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பேக் 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இதைத் தவிர ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் அரிசி 5 கிலோ 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகின்றன.

இந்த மலிவு விற்பனையின் வாயிலாக சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :