ECONOMYSELANGOR

பூச்சோங்கில் வெ.1.62 கோடி செலவில் நவீன விளையாட்டுத் தொகுதி- 2024 ஆகஸ்டு மாதம் பூர்த்தியாகும்

ஷா ஆலம், டிச 20- பொது வசதிகள் மற்றும் விளையாட்டுத் தொகுதியை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் சுபாங் ஜெயா, புசாட் பண்டார் பூச்சோங்கில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இத்திட்டம் வரும் 2024ஆம் ஆகஸ்டு மாதம் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

மொத்தம் 4.31 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் இந்த விளையாட்டுத் தொகுதி அனைத்துலகத் தரத்திலான புட்சால் விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும் என அவர் சொன்னார். இது தவிர, உடை மாற்றும் அறை, நடுவர் அறை, விருந்தினர் அறை, ஊடக அறை, நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும் இந்த
விளையாட்டுத் தொகுதியில் ஏற்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

நேற்று முன்தினம், உலக கிண்ணக் கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தை முன்னிட்டு இங்குள்ளப் புசாட் பண்டார் பூச்சோங், தாசேக் தாமான் வாவாசானில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரங்கிற்கு வெளியே, 270 மீட்டர் நீளம் கொண்ட நடைபயிற்சித் தடம், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு பூங்கா, கார் நிறுத்துமிடம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளதாக ஜோஹாரி மேலும் குறிப்பிட்டார்.

இந்நகரில் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கும் ஆரோக்கிய நகரை உருவாக்கும் மாநகர் மன்றத்தின் நோக்கத்திற்கும் ஏற்ப இந்த திட்டம் அமைகிறது என அவர் சொன்னார்.


Pengarang :