ECONOMYPBT

பூச்சோங் பெர்மாய் அங்காடிக் கடைகள் உடைக்கப்பட்டது ஏன்? சுபாங் ஜெயா மாநகர் மன்றம் விளக்கம்

ஷா ஆலம், டிச 24- பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஜாலான் தக்வா, பெர்சியாரான பூச்சோங் பெர்மாயில் சாலையோர ரிசர்வ் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த அங்காடிக் கடைகள் உடைக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அப்பகுதியில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கடைகளை மற்றவர்களுக்கு வாடகைக்கு கொடுத்தது தொடர்பில் தாங்கள் பொது மக்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்களைப் பெற்று வந்ததாக மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

அந்த வியாபார வளாகத்திற்கு எதிராக கடந்த் 2020 முதல் தாங்கள் நடவடிக்கை எடுத்து வந்துள்ள போதிலும் அங்குள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக பலர் மாநகர் மன்றதைக் குற்றஞ்சாட்டி வந்தனர் என்றும் அவர் சொன்னார்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சுத்தத்தை பராமரிக்காதது தொடர்பில் கிடைத்த பல புகார்களின் பேரில் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம். கடைகளை உடைக்கும் நடவடிக்கை கூட பல முறை ஒத்தி வைக்கப்பட்டு அண்மையில்தான் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் விளக்கினார்.

அந்த சாலையோர ரிசர்வ் நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 25 கடைகளை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் கடந்த புதன் கிழமை உடைத்தது. பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு டத்தாரான் நியாகா பூச்சோங் பெர்மாயில் உள்ள மேடான் செலேராவில் வியாபார இடங்களை அது வழங்கியுள்ளது.

கடைகள் உடைக்கப்பட்ட இடத்திலிருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் அந்த டத்தாரான் உணவு வியாபார மையம் உள்ளதால் வியாபாரிகளுக்கு அதிக சிரமமோ பாதிப்போ ஏற்படாது என உறுதியளித்த ஜோஹாரி, அங்குள்ள வியாபார இடத்திற்கு மாதம் 30 வெள்ளி மட்டுமோ வாடகை வசூலிக்கப்படுகிறது என்றார்.


Pengarang :