ECONOMYNATIONALPBT

சிறிய வாகனங்கள் வைத்திருக்கும் கெந்திங் பணியாளர்கள் பத்தாங் காலி சாலையைப் பயன்படுத்த அனுமதி

ஷா ஆலம், டிச 24- நிலச்சரிவு காரணமாக ஓராண்டு காலத்திற்கும் மூடப்பட்டிருக்கும் கெந்திங்-பத்தாங் காலி சாலையை சிறிய வாகனங்களை வைத்திருக்கும் கெந்திங் ஊழியர்கள் பயன்படுத்துவதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

பத்தாங் காலி, கோல குபு பாரு மற்றும் உலு பெர்ணம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்று மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

மலை மீது அமைந்துள்ள கெந்திங் உல்லாசத் தளத்தில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் மற்றம் சுற்றுவட்டாரத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைக் கருத்தில்  கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த சாலையை மோட்டார் சைக்கிள்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் அறிவித்துள்ள போதிலும் இவ்விவகாரம் தொடர்பான நுட்ப அம்சங்கள் குறித்து இன்னும் ஒரு வார காலத்தில் விவாதிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.42 மணிளவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் கெந்திங்-பத்தாங் காலி சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இந்த நிலச்சரிவில் 29 சிறார்கள் உள்பட 92 பேர் பாதிக்கப்பட்டனர் 

பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து 61 பேர் உயிருடன் மீட்கப்பட்ட வேளையில் 30 பேர் இறந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஒரு சிறுவனின் உடலை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது


Pengarang :