ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளம் தணிகிறது- சபாவில் கடல் பெருக்கு அபாயம்

கோலாலம்பூர், டிச 26- நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் வெள்ள
நிலைமை சீரடைந்து வருகிறது. திரங்கானு, கிளந்தான், பேராக் மற்றும்
சரவாவில் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின்
எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ள வேளையில் சபாவில் கடல்
பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு
கண்டுள்ளது.

திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து சீரடைந்து வரும்
நிலையில் அம்மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில்
தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 3,908ஆக குறைந்தது. நேற்று
காலை இந்த எண்ணிக்கை 5,810 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளந்தான் மாநிலத்தின் தும்பாட் மற்றும் பாசீர் மாஸ் மாவட்டங்களில்
உள்ள 19 நிவாரண முகாம்களில் நேற்றிரவு 2,561 குடும்பங்களைச் சேர்ந்த
7,746 பேர் தங்கியிருந்தனர். நேற்று காலை 4,393 குடும்பங்களைச் சேர்ந்த
12,786 பேர் அங்கு அடைக்கலம் நாடியிருந்தனர்.

பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் நேற்று மாலை 4.00
மணி நிலவரப்படி 14 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் நிவாரண
மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்னர் 19
குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் இங்கு அடைக்கலம் நாடியிருந்தனர்.

இதனிடையே, பாகான் டத்தோ தொகுதியிலுள்ள சுங்கை தியாங் டாராட்
தேசிய பள்ளியில் செயல்பட்டு வந்த தற்காலிக நிவாரண முகாம் நேற்று
மூடப்பட்டதாக மாநில வெள்ள மேலாண்மை செயல்குழு கூறியது.

அந்த மையத்தில் இருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் நேற்று
நண்பகல் 12.00 மணியளவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத்
தொடர்ந்து அந்த மையம் மூடப்பட்டதாக அது தெரிவித்தது.

சரவா மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள்
எண்ணிக்கை அபரிமிதமாக குறைந்துள்ளது. நேற்று காலை 381 குடும்பங்களைச் சேர்ந்த 1,424 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த நிலையில் மாலை 3.00 மணியளவில் அந்த எண்ணிக்கை 27 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேராக குறைந்தது.


Pengarang :