ALAM SEKITAR & CUACAECONOMY

கம்போங் புடிமான் நீர் சேகரிப்பு குளம் 2025ஆம் ஆண்டு பூர்த்தியாகம்

கிள்ளான், டிச 29- சிலாங்கூர் மந்திரி புசார் அண்மையில் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்த மேரு,  கம்போங் புடிமான் வெள்ள நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்புத் திட்டம் அப்பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேரு 2, தேசிய பள்ளிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த  திட்டம் இன்னும் ஈராண்டுகளில் பூர்த்தியாகும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபாக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

இந்த குள நிர்மாணிப்புத் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது. எனினும், மோசமான வானிலை காரணமாக அதன் கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வேறு பிரச்சனைகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய அந்த திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.

இந்த வெள்ள நீர் சேகரிப்பு குளம் தவிர்த்து சுங்கை பாக்குலில் உள்ள வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை ஆழப்படுத்துவது  பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர் இறைப்பு இயந்திர நிலையத்தை தரம் உயர்த்துவது ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று எத்திகா டைரிஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் வாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெள்ளத்தை தணிப்பதற்கான திட்டங்களை சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை 4.5 கோடி வெள்ளி செலவில் மேற்கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

அத்திட்டங்களில் கம்போங் புடிமானில் 2 கோடி வெள்ளி செலவில் நீர் சேகரிப்பு குளத்தை அமைப்பதும் அடங்கும் என அவர் கூறியிருந்தார்.


Pengarang :