MEDIA STATEMENTSELANGOR

குற்றச் செயல்களைத் தடுக்க விழிப்புணர்வு இயக்கங்கள் தொடர்ந்து நடத்தப்படும்- ஏசிபி விஜய ராவ் தகவல்

கிள்ளான், டிச 30- வட கிள்ளான் மாவட்டத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளதோடு கடந்த ஜனவரி முதல் 14 குற்றச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் கூறினார்.

பாதுகாப்பு இயக்கங்களைத் தமது தரப்பு தொடர்ந்து நடத்தி வருவதோடு குற்றச் செயல்களைத் தடுப்பதன் அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்தும் வருவதாக உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறினார்.

கைகலப்பில் ஈடுபடுவது, மற்றவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவது, வன்செயலில் ஈடுபடுவது போன்றவை கடும் குற்றங்களாகவும் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி, கட்டுமானப் பகுதிகளில் இரும்புப் பொருள்களைத் திருடுவது ஆகியவை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவாக வட கிள்ளான் மாவட்டத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது. குற்றச் செயல் தடுப்பு இயக்கங்களை அடுத்தாண்டில் மேலும் தீவிரமாக நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

எத்திகா டெய்ரிஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று இங்குள்ள மேருவில் நடைபெற்ற பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் வாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தாரும் கலந்து கொண்டார்.

பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பின் காரணமாக இம்மாவட்டத்தில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் விஜய ராவ் தெரிவித்தார்.  


Pengarang :