ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜனவரி 15 தொடங்கி மீண்டும் மலிவு விற்பனை- தினசரி 11 இடங்களில் நடத்த ஏற்பாடு

ஷா ஆலம், ஜன 1- சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனை இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறும். முன்பு ஒன்பதாக இருந்த தினசரி விற்பனை இடங்களில் எண்ணிக்கை புத்தாண்டில் 11 இடங்களாக அதிகரிக்கப்படும்.

மலிவு விற்பனைக்கான இடங்களை அடையாளம் காணும் பணியிலும் விற்பனை அட்டவணையைத் தயார் செய்யும் நடவடிக்கையிலும் தாங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக சிலாங்கூர் மாநில  விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) சந்தைப் பிரிவு உயர் அதிகாரி கூறினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்பு அறிவித்ததைப் போல் இந்த ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) மலிவு விற்பனையை இவ்வாண்டிலும் தொடங்கவுள்ளோம். கடந்த முறை ஒன்பது இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்தி வேளையில் இம்முறை இரு இடங்களை அதிகரிக்கவிருக்கிறோம் என முகமது பாஸிர் அப்துல் லத்திப் சொன்னார்.

இந்த விற்பனை இயக்கத்தில் கடந்த முறை விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்து பொருள்ளோடு ரொட்டியும் புதிதாக சேர்க்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த ஏசான் ராக்யாட் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேக முகவர்களை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் வழி மூன்று மாத காலத்தில் மாநிலத்திலுள்ள சுமார் 20 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

இந்த முதல் கட்ட ஜே.இ.ஆர். திட்ட அமலாக்கத்தின் போது மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 693 இடங்களில் இந்த விற்பனை நடத்தப்பட்டதாக கூறிய அவர், இதன் மூலம் 1 கோடியே 60 லட்சம் வெள்ளிக்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டதாகச் சொன்னார்.

இந்த விற்பனையில் கோழி (வெ.10.00), முட்டை (ஒரு தட்டு வெ.10.00), கெம்போங் மீன் (ஒரு பொட்டலம் வெ.6.00) ஆகியவற்றோடு சமையல் எண்ணெய் ( 5 கிலோ வெ.25.00) மற்றும் அரிசி (5 கிலோ வெ.10.00) போன்ற அத்தியாவசியப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன.


Pengarang :