ECONOMYSELANGOR

சிலாங்கூரில் ஹராப்பான் கூட்டணி 40 தொகுதிகளை வெல்லும்- ரபிஸி நம்பிக்கை

ஷா ஆலம், ஜன 15- விரைவில் நடைபெற இருக்கும் மாநில தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சிலாங்கூரை தக்க வைத்துக் கொள்ளும் என்று பி.கே.ஆர். துணைத் தலைவர் ரபிஸி ரம்லி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத் திட்டத்தை பக்கத்தான் வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

தற்போது நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் இன்னும் ஆறு மாத காலத்தில் செய்யப்படவுள்ள சீரமைப்புகள் வாயிலாகவும் தற்போது நம் வசம் உள்ள 40 தொகுதிகள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு மாநிலத்தில் மொத்தம் உள்ள 56 தொகுதிகளில்  45 முதல் 47 தொகுதிகள் வரை  செல்வதற்குரிய  சாத்தியமும் உள்ளது என்று அவர் சொன்னார்.

ஒற்றுமை அரசாங்கத்தை பக்கத்தான் ஹராப்பான் வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை மாறுபட்ட பல ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. பக்கத்தான் தன் வசமுள்ள தொகுதிகளை எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும். பக்கத்தான் வாக்காளர்கள் குறிப்பாக நகர்ப்புறங்கள் மற்றும் பகுதி நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமை அரசாங்கம் தொடர்பான முடிவை ஏற்றுக் கொண்டதோடு இத்தகைய கொள்கையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்துள்ளனர் என்றார் அவர்.

பக்கத்தான் ஹராப்பான் அடிமட்ட உறுப்பினர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொண்டு விட்டனர். எனினும், தேசிய முன்னணி வாக்காளர்களுக்கு எந்த அளவு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதுதான் தற்போதைய சவாலாகும் என்றார் அவர்.

ஷா ஆலம், ஐடியால் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில பிகேஆர். கட்சியின் தேர்தல் மாநாட்டில் கலந்து  கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து வினவப்பட்ட போது, பக்கத்தானின் புதிய கூட்டணியான தேசிய முன்னணியுடன் அது குறித்து இன்னும் விவாதம் நடத்தப்படவில்லை என்று ரபிஸி பதிலளித்தார்.


Pengarang :