ACTIVITIES AND ADS

காயங்களுடன் சாலையோரத்தில் கைவிடப்பட்டச் சிறுவன் மீட்பு

கோலாலம்பூர், ஜன 15- வன்கொடுமைக்கு ஆளானதாக நம்பப்படும் சிறுவன் ஒருவன் உடலில் காயங்களுடன் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான்.

செராஸ், ஒன்பதாவது மைல், பங்சாபுரி செராஸ் உத்தாமா அருகிலுள்ள சாலை சந்திப்பு ஒன்றின் அருகே அச்சிறுவன் காணப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜைட் ஹசான் கூறினார்.

உள்ளுர் மொழியில் பேச இயலாத நான்கு வயது மதிக்கத்தக்க அச்சிறுவனை நேற்றிரவு 11.30 மணியளவில் பொது மக்கள் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்ததாக அவர் சொன்னார்.

தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செராஸ் 9வது மைல் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ரோந்துக் குழுவினர் அச்சிறுவனை மீட்டனர். அந்நிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் அச்சிறுவனின் உடல், கைகள், விரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயம் காணப்பட்டது என்று அவர்  தெரிவித்தார்.

அச்சிறுவன் தற்போது காஜாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக க் கூறிய அவர், அச்சிறுவனின் உடல்  நிலை சீராக உள்ளதாகச் சொன்னார்.

வன்கொடுமை மற்றும் புறக்கணிப்பு தொடர்பில் 2001ஆம் ஆண்டு  குற்றவியல் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :